Monday, July 21, 2008

காவியக்காதல்

பொதிகை மலையிடைத்
தென்றலால் ஆசையும்
பூந்தளிறாய் நடைபயின்றாள்,
அம்மெல்லிடையாள்.

பகலவன் பார்வையில்
பட்டதும் முழுநிலவாய்,
மன்னவன் முன்னவள்
பொலிவுடன் நின்றனள்.

மன்னவன் மார்பினில்
மாலையாய் அமர்ந்தாள்
அல்லிச்சரம் உடுத்திய
அழகு மங்கை.

தேன்தமிழூறிய
பலாச்சுளை அதரத்தால்
ஆநிரைத்தலைவனிடம்
ஐயமொன்று வினவினாள்.

காதலெனும் மோகமுறும்
காளையரும் கன்னியரும்
விழிவழி பேசும்
விந்தை என்னவென்றாள்?

"நறுமணம் வீசும்
மலர்களினிடையே
காதலின் பரிமாற்றம்
உணர்வாயோ!

காற்றின் வழியே
நிகழும் அந்த
மகரந்தச் சேர்க்கை
அறிவாயோ!

மலர் மனம் இரண்டின்
வார்த்தைகள் இங்கு,
கண்களின் வழியே
காற்றினில் நுழைந்து,

மனங்களின் சேர்க்கை
நிகழ்கின்றது;காற்றில்
காதலின் நறுமணம்
நிறைகின்றது."

புன்னகை தவழ
மன்னவன் கூறிட,
காதலின் கவித்துவம்
மங்கை உணர்ந்தாள்;
அதன் தீஞ்சுவையில்
தன்னை மறந்தாள்.

இவண்
பாலாஜி

No comments: